Friday, April 16, 2010

அவரவர் இரவு


விடிவதனால் எந்தப் பயனும் இல்லாத நீண்ட கோடை இரவொன்றை “டொக் டொக்” என்று தடிச்சத்தம் கொண்டு தட்டிக் கழித்துக்கொண்டிருந்தான் உப்பிலியப்பன். அவ்விடத்தின், அன்றைய இரவின் முக்கிய அங்கமாக அந்த சத்தம் ஒலித்துக்கொண்டிருந்தது. அதன் சுருதியாய் எதிரில் விரிந்திருந்த கடலின் பேரிரைச்சல். கோடை வெயில் இரவில் தரையிலிருந்து எழுந்தது. உப்புக்காற்று கடல்துளிகளோடு வந்து படிந்து, வியர்வையுடன் கலந்து அவனுடைய அடர்ந்த சீருடைச்சட்டையை இரண்டாம் தோலாக உடலில் படரச்செய்தது. பகலுக்குப்பின்னான தொடர்ச்சியான இரண்டாம் ஷிப்ட்டின் சோர்வு கண்ணிமைகளை யாரோ பிடித்து தொங்குவது போல இருந்தது. தடிதட்டும் சத்தம் குறைந்து கண்கள் சொருகும் தோறும், கண்ணில் பட்டு எரியும் வியர்வையின் உப்போ, தன்னையறியாத ஒரு எச்சரிக்கை உணர்வோ, புது இடத்தின் மீதான உள்ளார்ந்த பயமோ விழிப்புத்தட்டச் செய்துவிடும்.

கும்பகோணத்தில் இருக்கையில் அவன் இதுபோன்ற எந்த பிரச்சனைக்கும் ஆளானதில்லை. உண்ட மயக்கத்தில் உறங்குவதும், பசி எழுப்பினால் எழுவதும், ஊர்ப்பெண்களின் வளர்ச்சியை தொடர்ச்சியாகக் கண்காணிப்பதுமே வேலைகள். பொறுமையையும் நம்பிக்கையையும் இழக்கும் ஒவ்வொரு படிநிலையிலும் அப்பா ஆவேசமாக தன்னிலை விளக்கம் கொடுப்பார். அது அவனை பொதுவாக பாதிப்பதில்லை. ஆனால் அவ்விளக்கத்தை தன்னிடமிருந்தும் அவர் எதிர்பார்க்கும்போதுதான் உப்பிலி வெகுண்டெழுவான். ஒரு திருநாளில் கைகள் கலந்தார்கள். வாசலில் ஊரார் அறிவுரைகளுடன் வரிசையில் காத்திருந்தார்கள். இவன் சில காலத்திற்கு புறவாசல் வழி போக்குவரத்து நடத்திக்கொண்டிருந்தான். நெடுநாட்களுக்குப்பிறகு அவன் முன்வாசலுக்கு வந்தப்போது கூட ஒரு பெண் இருந்தாள். அவர்களின் தோள்களில் கிடந்த ரோஜா மாலையின் இதழ்கள் உதிர உதிர அப்பா கத்தினார், அம்மா குறுக்கே பாய்ந்து கைகலப்பை தடுத்தாள். ஆக இல்ல நுழைவுப் போராட்டம் வெற்றி பெற்று இட ஒதுக்கீடும் கிடைத்தது. உப்பிலி செய்த சில்லறை வேலைகளினால் பணநெருக்கடி தீரவில்லை, ஆனால் வீட்டுக்குள் இருந்த இடநெருக்கடி காரணமாக ஒரு பிள்ளையைப் பெற்றெடுத்தார்கள்.

“பெத்த பிள்ளைக்கு பால் வாங்க வக்கில்ல, நீயெல்லாம்....” என்று நீண்ட அந்த வாக்கியம்தான் அவன் கையைப் பிடித்து இழுத்து வந்து பஸ்ஸில் ஏற்றி சென்னையில் கொண்டுவிட்டது. சொல்லின் சூடு தணிவதற்குள் அவன் தேடிக்கொண்டது ஒரு செக்யூரிட்டி வேலை. இன்று கடற்கரை சாலையில் ஒரு ATM மின் வாசலில் சென்னையின் கோடை அந்த சொல்லின் சூட்டைத் தணித்துக்கொண்டிருக்கிறது. “டொக் டொக்” சத்தம் மீண்டும் பலமானது. மனதுக்குக் கேட்குமாறு முனகிக்கொண்டே கண்களை அகலத் திறந்துவைக்க முயற்சித்தான். தீயாய் எரிந்தது. சாலையில் மங்கலாக ஒளிகளும் உருவங்களும், கடல் சாலைக்கு ஏறிவருவதைப் போல ததும்பியது. டொக் டொக் சத்தம் பலமாகிக்கொண்டே வந்தது. சடாரென விழித்தவன் சத்தம் தன்னிடமிருந்து வரவில்லை என்று உணர்ந்தான். தூரத்தில் சாலையில் இருவர் வருவது தெரிந்தது. ஒற்றைக் காலுக்கு மாற்றாய் ஒரு கம்பை ஊன்றிக்கொண்டு ஒரு சிறுவனை கூட அழைத்துக்கொண்டு ஒருவன் இவனை நோக்கி நடந்து வந்தான். உப்பிலி சுதாரித்துக்கொண்டு தடியைத் தட்டத்தொடங்கினான். அவர்கள் இருவரும் இவனை நெருங்கினர்.

“இன்னா சார் புதுசா? பரமேசு தான இருப்பாரு, இன்னாச்சு அவருக்கு?” உப்பிலி பேசவில்லை. சென்னைக்கு கிளம்பியதுமே அவனுக்கு இலவசமாக அறிவுறுத்தப்பட்டவைகளில் தலையாயது இது.

“ஏம்பா மெர்சலாவுற, நாங்க இங்க டெய்லி வருவோம்பா... இது நம்ம மவன்...” இருவரும் அருகில் கிடந்த கல்லில் அமர்ந்தார்கள்.

“நீ ஊருநாட்டானா?... இன்னா ஊரு? பேரு இன்னா?... எதானும் சொல்லுப்பா...”

“உனக்கு இப்ப என்ன வேணும்? இங்கெல்லாம் ஒக்காரக் கூடாது கெளம்பு...”

“த பாருப்பா... நான் இங்க பக்கத்துல குப்பத்துல தான் இருக்குறேன்... நான் இங்க அடிக்கடிக்கு வருவேம்பா... பரமேசு நம்ம தோஸ்துதான்! வாரத்துக்கு மூணு நாலு நாளாச்சும் வருவேன்.”

“சரி இப்ப என்னதான் வேணும் சொல்லு...”

வந்தவன் முகத்தில் ஒரு சங்கடமான சிரிப்பு எழுந்தது. அந்த சிறுவன் அருகிலிருந்த விளக்குக் கம்பத்தில் சரிந்து தூங்க ஆரம்பித்தான். உப்பிலிக்கு சங்கடமாக இருந்தது. அவனைக் கூட்டிக்கொண்டு வீட்டுக்கு போகச் சொன்னான். வந்தவன் மறுத்தான். வீட்டில் மிகவும் புழுக்கமாக இருப்பதால் சிறுவன் தூங்க மறுத்ததாகவும், அதனால் சற்று காற்றாட நடந்துவிட்டு வரலாம் என்று கூட்டி வந்ததாகவும் கூறினான். உப்பிலிக்கு லேசாக நம்பிக்கை பிறந்தது, சற்றே இணக்கமாக உரையாட ஆரம்பித்தான்.

“என்ன ஆச்சு காலுக்கு?”

“ஆக்ஸிடன்ட்டுபா... ரிக்சா வலிச்சுனு இருந்தன், கால்லயே உய்ந்துச்சு அடி! அப்பறம் இன்னா பண்றது.... சம்சாரம் வேலைக்கு போவுது. கால் சென்டரு இல்ல... அங்க ஆயா வேல.”

மனைவி சம்பாத்தியத்தில் தான் குடும்பம் நடப்பதாகவும், மகன் படித்தாக வேண்டும் என்பதில் இருவரும் உறுதியாக இருப்பதாகவும் அவன் சொன்னான். பின்னர் உப்பிலி தன்னைப் பற்றி தயங்கித் தயங்கி சொல்ல ஆரம்பித்தான். “டொக் டொக்” என்று ஒரு மணி நேரத்திற்கு உரையாடல் சென்றது. இடையிடையே விழித்துப்பார்த்த சிறுவன் எதுவுமே பேசவில்லை. வந்தவன் பேசித்தீர்த்தான். அவனது பெருங்கனவுகளை விவரித்துக்கொண்டே இருந்தான். இடையிடையே சிறுவனின் தலையை தடவிக்கொடுத்துக் கொண்டெயிருந்தான். இருவரின் பேச்சிலும் உற்சாகம் கூடிக்கொண்டேயிருந்தது. மெல்ல மெல்ல உயர்ந்த சிரிப்பொலி இருளை நிரப்பி கடலோசையை அமர்த்தியது. உப்பிலிக்கு வேலையின் சோர்விலிருந்தும் மன அழுத்தத்திலிருந்தும் சற்றே விடுதலை கிடைத்தது. அப்போதுதான் உணர்ந்தான், வீட்டில் சண்டை போட்டு கிளம்பி ஒரு வாரத்திற்குப் பிறகு இப்போதுதான் சிரிக்கிறான் என்பதை. அதுவும் சத்தமாகச் சிரித்தது சண்டைக்கெல்லாம் பல காலம் முன்பு.

சாலையில் ஒரு வண்டி இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. அருகில் வர வர அது போலீஸ் ஜீப் என்று தெரிந்தது. அவர்களுக்கு அருகில் வந்து நின்றது. உப்பிலி சடாரென்று எழுந்து நின்று விரைப்பாய் ஒரு சல்யூட் அடித்தான். எஸ்.ஐ. எட்டிப்பார்த்தார்.

“யாருய்யா நீ புதுசா இருக்க?”

“ஆமா சார் புதுசு...ஓவர்டைம் பாக்குறேன் சார்”

எஸ்.ஐ. இப்போது அவனைப் பார்த்தார். “நீ என்னடா இங்க நிக்கிற?”

அவன் தலையை சொறிந்தபடியே “சும்மாதான் சார்...”

எஸ்.ஐ. ஒரு நமட்டுச் சிரிப்புடன் “சும்மாவா... சும்மாவா நீ நிப்ப... அவன் கிட்ட பேசி முடிச்சிட்டியா?”

“அதெல்லாம் ஒன்னும் இல்லீங்கய்யா...”

“ம்ம்.... இப்படியே டெய்லி சொல்லு... சரி... காலைல வா ஸ்டெஷனுக்கு சீக்கிரம் முடிச்சுட்டு போயிரலாம்”

“ஐயா...”

“டேய்... அதான் காலைல முடிச்சுரலாம்னு சொல்றேன்ல... அப்பறம் என்ன ஐயா.. நொய்யான்னுட்டு... கெளம்பு கெளம்பு.... ஏய் செக்யூரிட்டி... நீ உன் வேலைய கவனி... அவன்கூட உனக்கு என்ன வேல? இது ரொம்ப சென்சிட்டிவான ஏரியா அலர்ட்டா இரு என்ன?”

“சரிங்க சார்” மீண்டும் விறைப்பாய் ஒரு சல்யூட்.

வந்தவன் தலையைக் குனிந்து கொண்டு நின்றிருந்தான். சிறுவன் அவனது கையை இறுகப் பற்றியிருந்தான். ஜீப் மெல்ல நகர்ந்தது. அதன் திறந்திருந்த பின்புறத்திலிருந்து ஒரு பெண் கை நீண்டு ஒரு சாவியை சாலையில் வீசி எறிந்தது. சாவி கினிங் கினிங் என்ற ஒலியுடன் சாலையில் விழுந்து அதிர்ந்து அடங்கியது. அவன் சலனமில்லாமல் சிறுவனைக் கூட்டிக்கொண்டு சென்று குனிந்து சாவியை எடுத்துக் கொண்டு திரும்பாமல் நடக்கத் தொடங்கினான். “டொக் டொக்” என்று சாலையில் ஓசை ஒலித்தது. அகன்ற விழிகளுடன் அவனும் அவ்வொலியும் மறையும் வரை பார்த்திருந்தான் உப்பிலி. கடலின் பேரிரைச்சல் துல்லியமாகக் கேட்டது.


--விஜயராகவன்

1 comment:

  1. உங்கள் மொழி அபாரம் விஜய். தொடர்ந்து எழுதுங்க.

    ReplyDelete