
My article in Uyirmmai. http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2744
தமிழ் சினிமாவும் திரைக்கதை விவாதமும்
ஹெச்.விஜயராகவன்
பதினைந்து இருபது வருடங்களுக்கு முன் தூர்தர்ஷனில் ஒரு விழிப்புணர்வு கார்ட்டூன் படம் ஒளிபரப்பப்படும் ‘The Baloon’ என்ற தலைப்பில். ஒரு சிறுவன் வீட்டிற்குள் ஒரு பலூனைப் பெரிதாக ஊதிக்கொண்டே போக, அது படாரென்று வெடித்து விடும். அந்த சத்தத்தை வெளியில் இருந்து கேட்கும் ஒருவன் பயந்து போய் ஓடிச் சென்று ஒரு பெண்ணிடம் தான் ஒரு துப்பாக்கி வெடித்ததைக் கேட்டதாகச் சொல்வான். அந்தப் பெண் இரண்டு துப்பாக்கிகள் வெடித்ததாகத் தன் கணவனிடம் சொல்வாள். இவ்வாறாக விஷயம் பல உருவங்கள் கொண்டு பல துப்பாக்கிகள் வெடித்துப் பலர் இறந்ததாகப் பரவி அது பெருஞ்செய்தியாகிப் பல விளைவுகளை ஏற்படுத்தி விடும்.
‘வதந்திகளைப் பரப்பாதீர்’ என்ற விழிப்புணர்வுச் செய்திக்காக எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும், இதில் மனித வரலாற்றின் ஓரு முக்கியமான உளவியல் உண்மை பொதிந்திருக்கிறது. கதைகள் கைமாறும்போது திரிந்து வளரும் என்பதே அது. இதன் அடிப்படை என்னவென்பதை ஆராய்ந்தால், ஒரு மனிதன் மற்றொருவனிடம் ஒரு கதையைச் சொல்லும்போது அதில் தன்னுடைய பங்களிப்பைச் சேர்க்க வேண்டும் எனக் கொள்ளும் உந்துதலே அது என்பதை அறியமுடியும். சக மனிதனுடனான உரையாடலில் செய்திகளைப் பரிமாறுகையில் கவனமின்மையையும் தகவல் இழப்பையும் தவிர்க்க சுவாரஸ்யம் என்ற தன்மை இருக்க வேண்டும் என்ற அடிப்படை வேட்கையிலிருந்து உருவாவதே நம்முடைய கதை சொல்லல் மரபு. இதனை ஆதாரமாகக் கொண்டு உருவாவதே கதை, நாடகம், சினிமா ஆகிய அனைத்தும்.
பரிணாம வளர்ச்சியில் உயிர்களின் புற அமைப்புகள் சூழ்நிலைக்குத் தக்கவாறு மாற்றம் அடைந்து கொண்டே வரும். இந்த மாற்றமானது வெளிப்புறத்தில் துலக்கமாகத் தெரியும். ஆனால் இம்மாற்றங்களுக்கான வேர் ஜீன்களில் இருக்கிறது. ஜீன்கள் தங்களின் இருப்பைத் தற்காத்துக் கொள்ளும் பெருமுயற்சியே இன்று நாம் வால்களை இழந்து நிமிர்ந்து நடப்பதற்கான காரணம். இந்த தத்துவம் கதைகளுக்கும் அமைகிறது. சுவாரஸ்யத் தன்மையற்ற செய்திகள் காலப்போக்கில் அழிந்து விடக்கூடும் என்ற மனிதப் புரிதலிலிருந்து உருவாவதுதான் இலக்கியம், இந்த மரபின் செழிப்பான குழந்தையான சினிமாவுக்கு எப்படி இந்த விதி பொருந்தாமல் போகும்?
ஒரு கதை. திரைக்கதையாக உருவெடுக்கும்போது அக்கதையின் அத்தனை சாத்தியக் கூறுகளையும் கண்டடைய வேண்டியிருக்கிறது. அந்தக் கதை நிகழும் நிலத்தின் புவியியல் கூறுகள், அந்த நிலப்பரப்பின் பொதுக்கூறுகள், கதைமாந்தர்களின் குணாதிசயங்கள; அவர்கள் அணியும் உடைகள், அவர்கள் உண்ணும் உணவு, அவர்களது இசை, அவர்களின் பேச்சு வழக்கு மற்றும் அவர்தம் தார்மீகப் பிரச்சினைகள் என அனைத்தும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். இந்த முழுமை உண்மையின் அடிப்படையில் என்றால் ஒரு ‘City of God’ம் புனைவின் அடிப்படையில் என்றால் ஒரு ‘அவதா’ரும் உருவாகி வரும்.
இந்தத் தரவுகளைக் கொண்டு திரைக்கதையாளன் உருவாக்கும் சித்திரம் என்பது அவனுடைய பரிமாணம் மட்டுமே. அது உண்மைக்கு நெருக்கமானதா இல்லையா என்பதில் இல்லை அப்படத்தின் சிறப்பு. சுவாரஸ்யமானதா, ரசனையானதா என்பவற்றில் தான் இருக்கிறது. இந்த அடிப்படையில்தான் ‘ஆயிரத்தில் ஒருவன்’ போன்ற படங்கள் அணுகப்பட வேண்டும் என்பது என் கருத்து. விவாதிக்கப்படுகிற திரைக்கதையானது ஒரு கதையின் மேற்கூறிய எல்லா சாத்தியக்கூறுகளையும் கண்டடைவதற்கு நிச்சயமாக வகை செய்யும். கதை விவாதத்திற்கு உலக இலக்கியமும், உலக சினிமாவும் அறிந்த ஒரு அறிவு ஜீவிக் குழாம் தேவையில்லை. ‘Fahrenheit 451’, என்ற பிரெஞ்சுப் படத்தில் ஒரு ஊரில் புத்தகங்கள் தடை செய்யப்படும். கண்ட இடத்தில் புத்தகங்களை எரிக்க உத்தரவு போடப்படும். அந்த சூழ்நிலையில் புத்தகங்களை விரும்பும் ஒரு கூட்டம் காட்டுக்குள் மறைந்து வாழ்வார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு புத்தகத்தைப் படித்து மனப்பாடம் செய்து வைத்திருப்பார்கள். அவர்கள் அப்புத்தகத்தின் பெயரிலேயே அழைக்கப்படுவார்கள். ஒவ்வொரு மனிதனும் அவ்வாறு பல கதைகள் கொண்ட புத்தகம்தான் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இருக்கமுடியாது. சரியான கேள்விகளின் மூலமும், சரியான படைப்பூக்கச் சூழலைத் தருவதன் மூலமும் அக்கதைகளை வெளிக்கொணர்ந்து காட்சிகளாகத் திரைக்கதைக்குள் பொருத்த முடியும்.
உதாரணத்திற்கு முதலில் சொன்ன பலூன் கதையையே எடுத்துக் கொள்வோம். அந்தக் கதையை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அதை ஒரு சைக்கோ கொலைகாரனின் கதையில் ஒரு இரவுக் காட்சியில் பொருத்திப் பாருங்கள். அதன் சாத்தியங்கள் விரிந்து கொண்டே போகும். அதே கதையைச் சற்று மாற்றி தமிழ் சினிமாவில் நகைச்சுவைக் காட்சிகளும் வந்துள்ளன. இதுபோன்ற ஒரு கதை, ஒரு கதை விவாதத்தில் சொல்லப்பட்டால். ‘இப்படித்தான் எங்க ஊர்ல...’ என்று உதவி இயக்குநர்களிடமிருந்து பத்துக் கதைகளாவது கிளைத்தெழும், அதில் மிக சுவாரஸ்யமான கதை காட்சியாய் உருமாறும். இதன் செய்தி, உதவி இயக்குநர்கள்தான் எல்லா காட்சிகளையும் சொல்கிறார்கள் என்பதல்ல. அதற்கான வேர் ஒரு நல்ல கதையிலும், இயக்குனர் அதைச் சரியான தருணத்தில் சரியான கேள்விகள் மூலம் வெளிக்கொணர்வதிலும் இருக்கிறது. திரைக்கதையே இல்லாமல் நடக்கும் ‘சீன் பிடித்தல்’ கலாச்சாரத்திற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. தமிழகத்தின் ஒரு முக்கியமான திரைக்கதையாசிரியருடன். பணிபுரிந்த எனது சொந்த அனுபவத்தில் நான் கண்டது இது. "பேசப் பேச கதை வளரும்" என்பதே நான் அங்கு கற்ற பாலபாடம். அதற்கு சாட்சியாக நான் இருந்திருக்கிறேன்.
‘கதை விவாதம்’ என்ற சொற்றொடருக்குத் தமிழகத்தில், ஏன் இந்தியா முழுவதுமே பல்வேறு அர்த்தங்கள் கற்பிக்கப்பட்டிருக்கின்றன. என்றதுமே மக்களுக்குக் கண்ணில் தெரிவது ஊட்டி, கொடைக்கானல், தற்போது பாங்காக், நட்சத்திர ஓட்டல், வெளிநாட்டு சரக்கு, வறுத்த முந்திரி, சிக்கன் மற்றும் பல. இதுவாவது பரவாயில்லை, மற்றும் ஒரு வாக்கியம் வார இதழ்களில் பிரபலமானது. " நடிகையை டிஸ்கஷனுக்கு அழைத்தார்கள்." இந்த ரீதியில்தான் நம் ஊரில் டிஸ்கஷன்கள் புரிந்துகொள்ளப் படுகின்றன. இந்தக் கூத்தையெல்லாம் அடித்து விட்டு எப்படி படத்தை ஒருவழியாக எடுத்துவிடுகிறார்கள்? என்று ஆச்சர்யப்படுபவர்களும் உண்டு.
கதை விவாதம் பற்றிய மாற்றுக் கருத்துக்கள் பெரும்பாலும் இந்தியாவில் மட்டுமே உள்ளன என்று நினைக்கிறேன். ஏனென்றால் இங்குதான் நிறைய "Hyphen Freaks" இருக்கிறார்கள். "Writer - Director", "Writer - Director"> "Writer Cum Editor Cum Director", "Writer Cum Editor cum D.O.P cum Director"இவ்வாறாக, இவர்களை "Cum Freaks" என்றும் சொல்லலாம், ஆனால் அர்த்தம் தவறாகிவிடும். இந்தப் பிரச்சினை ஹாலிவுட்டிலோ அல்லது மற்ற உலக நாடுகளிலோ பெரும்பாலும் இல்லை. அங்கே முதலில் ஒரு நாவலை அல்லது ஒருவரது கதையைத் தழுவுகிறார்கள், பின்னர் தொழில்முறை திரைக்கதையாசிரியர் ஒருவர் திரைக்கதை எழுதுகிறார். அதன் பின்பு திரைக்கதையானது இயக்குனர், ஒளிப்பதிவாளர், பிரதான நடிகர்கள், அரங்க வடிவமைப்பாளர் ஆகியோருடன் விவாதிக்கப்படுகிறது. பின்னர் இறுதியாக Shooting Script என்ற ஒரு இறுதி வடிவத்தை அடைகிறது. அது மூலத்திரைக்கதையிலிருந்து எத்தனை சதவிகிதம் மாறுபடும் என்பது அறுதியிட்டுக் கூறமுடியாததாக இருக்கிறது. இதில் கவனிக்கப்பட வேண்டிய உண்மை என்னவென்றால் விவாதத்தின் மூலமும் சிந்தனையின் மூலமும் வந்தடைந்த இந்த இறுதி வடிவத்தின் ஆணிவேர் அந்த மூலத்திரைக்கதையில்தான் இருக்கிறது என்பதே. இன்றைய இந்திய சினிமா சூழலில் தொழில்முறை திரைக்கதையாசிரியர்கள் பலர் இந்தி சினிமாவில் உருவாகி வருகிறார்கள். தென்னிந்திய சினிமாவில் குறிப்பாகத் தமிழ் சினிமாவில் அச்சூழல் விரைவில் வர வாய்ப்பிருக்கிறது. மலையாளத்தில் M.T. வாசுதேவன், லோகிததாஸ் போன்றவர்கள் சிறந்த திரைக்கதையாசிரியர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள். லோகிததாஸுக்குக் கதை விவாதங்களில் நம்பிக்கை இல்லையென்பதாக நான் படித்தேன். அது அவரது தனிப்பட்ட கருத்து. அவருக்குத் தனியாவர்த்தனத்தில் நம்பிக்கை இருந்திருக்கிறது. அவரது திரைக்கதைகள் சிறப்பானவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அவரது திரைக்கதைகள் விவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டிருந்தால் இன்னும் சிறப்படைந்திருக்குமா என்பது விவாதித்தால் மட்டுமே அறியக்கூடிய ஒன்று.
Arthur Miller என்ற நாவலாசிரியர் ஒரு நாடகாசிரியரும் கூட. அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. "படைப்பின் முழுக்கட்டுப்பாடும் உங்களுடையதாக இருக்கும் நாவலை விடுத்து ஏன் படைப்புக் கட்டுப்பாட்டைப் பகிரும் நாடகங்களை எழுதுகிறீர்கள்? அங்கே உங்களது படைப்பு ஒரு இயக்குனரிடம், பின்பு நடிகர்களிடம், அரங்க வடிவமைப்பாளரிடம் என்று பலரின் கைகளில் சென்று சேர்கிறதே?" அவரது பதில்: "எனது படைப்பு மற்றவர்களிடம் எவ்வகையான தூண்டுதல்களை ஏற்படுத்துகிறது என்பதை நான் பார்க்க விரும்புகிறேன். எனது படைப்பின் விளைவாக வெளிக்கொணரப்படும் உண்மைகள், உணர்வுகள், கருத்துக்கள் ஆகியவற்றின் சாத்தியங்களை நான் எழுதும்போது அறிந்திருப்பதில்லை. அவைதானே படைப்புகளின் மூலம் நாம் எதிர்பார்ப்பது?"
கதை விவாதிக்கப்படும் ஒவ்வொருவரிடமும் அக்கதையினுடைய ஒரு Visual version இருக்கும். அந்த Version ஐ அவர்களின் மனத்திரையில் சுதந்திரமாக ஓடவிட்டு, பொருத்தமான கேள்விகளின் மூலம் அதன் காட்சிகளை வெளிக்கொணர்ந்து அவற்றுள் மிகப்பொருத்தமான - கவனிக்கவும், மிகச்சிறப்பான அல்ல - காட்சியைத் திரைக்கதையில் கோர்ப்பதே, கதை விவாதக் கலை. சிறப்பான காட்சிகளினால் கவரப்பட்டு அதை உடனே திரைக்கதையில் சேர்ப்பது என்பது ரயிலில் ஒரு பெட்டிக்கு அழகான வேறு வண்ணம் பூசுவது போன்றது. ஓட்டத்தில் காணும்போது உறுத்தலாகவே இருக்கும்.
கதை விவாதத்தில் ஒரு இயக்குனர் அல்லது திரைக்கதையாசிரியர் கதையை முழு ஈடுபாட்டுடன் சரளமாகச் சொல்வதென்பது அதைத் திரையில் காண்பதற்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தக் கதை சொல்லலின்போது விவாதக் குழுவில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொருவருடைய முகமாற்றமும், உடலசைவும் முக்கியமானது, எந்த இடத்தில் புருவங்கள் விரிகின்றன, எப்போது சுருங்குகின்றன, எப்போது புன்னகைக்கிறார்கள், எப்போது சிரிக்கிறார்கள், எந்தக் காட்சியில் நிமிர்ந்து உட்காருகிறார்கள், எப்போது சரிகிறார்கள், அனைத்துமே கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். கதை சொல்லப்படும்போது எந்தவித வார்த்தை ஜாலங்களும் இன்றி செய்தி மட்டுமே சென்றடையும் விதத்தில் சொல்லப்பட வேண்டும்.
இதே திரைக்கதைதான் Script புத்தகத்திலும் உள்ளது. அதைப் படித்துக் கொள்ளலாம் என்றாலும், அது கதை கேட்கும் அனுபவத்திற்கு நிகராகாது. அப்படியே புத்தகத்தில் படிக்க நேர்ந்தாலும் ஒரு திரைக்கதை ஒரே மூச்சில் படிக்கப்பட்ட வேண்டும். இது சற்று சிரமமானது. ஏனெனில் ஒரு கதையைப் போல் திரைக்கதையானது படிக்க சுவாரஸ்யமாக இருக்காது. முழுக்கவனத்துடன் தொடர்ச்சியாகப் படிக்கும் போதுதான் அத்திரைக்கதையின் Emotional Growth பிடிபடும். இடையில் எழுந்துபோய் வேறொரு வேலையைப் பார்த்துவிட்டு வந்தால், கண்ணீர் துளிர்க்க வேண்டிய ஒரு காட்சியில், ஒரு ஞானியின் புன்னகையை உதிர்த்துவிட்டு நாம் நகர்ந்துவிடுவோம்.
ஒரு திரைக்கதையை இயக்குனர் படத்தொகுப்பாளருடனும், ஒளிப்பதிவாளருடனும் விவாதிப்பது அப்படத்தின் பாணியைக் கண்டடையும் ஒரு உத்தி. அனுபவமிக்க சில இயக்குனர்களுக்கு அவர்களுடைய சொந்த Vision of Style ஒன்று கூட இருக்கலாம். இந்த ஸ்டைல் சங்கதியைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல்தான் நாம் கௌதம் மேனனின் படங்களையும், ‘பில்லா’ போன்ற படங்களையும் Stylish படங்கள் என்று சொல்லி வருகிறோம். பிரகாசமான ஒளிப்பதிவு, டிசைனர்கள் வடிவமைத்த உடைகள, ஒரு சாமுராய் வீரன் வெட்டியது போன்ற எடிட்டிங் இவையெல்லாம் கொண்ட படங்கள்தான் Stylish படங்கள் என தமிழ்நாட்டில் சொல்லப்படுகின்றன. இப்படங்களில் நாம் காண்பது Style ஐ அல்ல, Richness மட்டுமே. ஒவ்வொரு வகைமாதிரிக்கும் (Genre) ஒரு Style இருக்கிறது என்பது தவறான புரிதல். ஒவ்வொரு கதைக்கும் இயக்குனர் கண்ணுக்கு மட்டுமே தெரியக்கூடிய ஒரு Style இருக்கும்.
கணவன் மனைவிக்கிடையே காமம் சார்ந்து ஏற்படும் ஒரு சிறு விரிசலும் அது சரியாவதுமே கதையாகக் கொண்ட ‘Eyes wide shut’ படத்திற்கு Stanley Kubrick க்கைத் தவிர வேறு யாரும் அத்தகைய ஒரு ஸ்டைலை யோசித்திருக்க முடியாது. பார்வையாளனை இருக்கையின் நுனிக்குக் கொண்டு வரும் காட்சி சாத்தியம் கொண்ட ‘zodiac’ படக்கதையை நிதானமான, உள்ளூர ஒரு இருண்மையையும், பயத்தையும், விரக்தியையும் சொருகும் ஸ்டைலை David Fincher கதையிலிருந்தே கண்டடைகிறார். இவையாவுமே ஒளிப்பதிவாளர் மற்றும் படத்தொகுப்பாளருடன் விவாதிப்பதன் பயன்கள்.
புனைவோ, நிஜமோ பேசப் பேசக் கதை வளர்ந்து அதன் களத்தின் எல்லா சாத்தியங்களையும் கண்டடையும். இதையே திரைக்கதையாக்கி, கதைக் களத்தை ஓர் அறைக்குள் அடக்கி கதை விவாதக் கலைக்கு வாழும் சான்றாக நிற்கும் படம்தான் ‘12 Angry Men’.

No comments:
Post a Comment