Monday, April 19, 2010

தியானம்


தகரம் தரித்த நகரப்பேருந்து நகரக் காத்திருக்கிறது
கோடை கூரையில் தவழ்ந்து நூறுவிரல் கொடுங்கரம் நீட்டுகிறது
சன்னல்வழி
படிக்கட்டிலும் படுத்திருக்கிறது வெய்யில்
சோறாகத் துணிந்த பிடி அரிசியாய்
உலை நுழைகிறது கூட்டமொன்று
ஊதல் குலவையிட்டு நடத்துனர் நடத்திவைத்தார்
இடைகவ்விய குழந்தையுடன் உடை நனைத்த வியர்வையுடன்
தாயொருத்தி படியேறினாள்
காதருகே அலறிய குழந்தையை அவள் கவனிக்காததை
பேருந்து மொத்தமும் கவனித்தது
கைதூக்கி கம்பியை பிடிக்கையில்
வலது மார்பு தெரியாமல் மறைக்கையில்

தடுமாற்றத்தில் குழந்தை இடிபடாமல் அணைக்கையில்
நிதானம் கொள்கிறது பேருந்து
அரசியல், வம்பு, புலம்பல், சீர்திருத்தம் என
வெற்று ஒலிகளால் நிறைந்திருக்கிறது பேருந்து
வார்த்தைகளற்ற குழந்தையின் அலறல்
நீளவாக்கில் பேருந்தைக் கிழிக்கிறது
வெயிலும், அனலும், கூச்சலும், கூட்டமும்
பேருந்தைக் குழந்தைக்கு என்னவெனக் காட்டும்?
கைமாற்றிப் பார்த்தாயிற்று, விசிறிவிட்டாயிற்று
பிரம்மாஸ்த்திரமாய் சப்பென்று அறைந்தாயிற்று
விடுதலை ஒன்றையன்றி வேறெதற்கும் தயாரில்லை குழந்தை
எல்லோருக்கும் ஒருமுறை அறையத்தான் தோன்றியது
அறியாமையும் இயலாமையும் வேறெங்கு முடியும்?
இருகோடுகள் தத்துவமாய் உரத்து ஒலிக்கத் துவங்கின
அரசியலும், தத்துவமும், வம்புகளும், புலம்பலும்
ஒலிக்கோளமாய் ஓடிக்கொண்டிருந்த பேருந்தின்
சன்னல்வழித்தெரிந்தது மயானம்
அம்மகாமெளனப் பெருவெளியிலிருந்து
சடாரென உள்நுழைந்ததொரு பட்டாம்பூச்சி
மனிதக்கம்பிகள் தரித்த ஒலிச்சிறைக்குள்
படபடத்துப் பறந்தது
அழுத குழந்தை அடங்கியது
கலங்கிய கண்களை படபடப்பின்மேல் பதித்தது
தலைசாய்த்து தலைசாய்த்து கூடப்பறந்தது
பின் தாயின் கண்களும் பதிந்தன
பல ஜோடிக் கண்கள் தொடர்ந்தன
கண்களைச் சுமந்து அலைந்தது பட்டாம்பூச்சி
குழந்தை சிரித்தது பெரியவர்கள் குழந்தையாயினர்
தகரச்சிறையெங்கும் பறந்து திரிந்துவிட்டு
அவரவர் வண்ணங்களை அவரவரிடமே விட்டுவிட்டு
விட்டு விடுதலையாகி வெளியே பறந்தது பட்டாம்பூச்சி
அனைவருக்கும் ஒரே கேள்வி எழுந்தது
“என்ன பேசிக்கிட்டு இருந்தோம்?”

No comments:

Post a Comment