Friday, May 14, 2010

இருள்வேண்டும் தீ

காதலியுடன் தனித்திருக்க
தவித்தலைந்த நாளொன்றில்,
சிகரெட் நெருப்பிற்காய்
திறந்த தீப்பெட்டியில்,
இணைந்திருந்தன
ஈற்றிரண்டு தீக்குச்சிகள்.
மூடி இருள் தந்து
புதரொன்றில் மறைத்து வைத்தேன்.

Monday, May 3, 2010


மின்சாரமற்ற இரவின் மெழுகுதிரிச்சுடரில்
அப்பாவின் புகைப்படம்,
வலியின்போது மட்டும் உணரும்
உடலுறுப்பு ஒன்றைப் போல.

Monday, April 19, 2010

தியானம்


தகரம் தரித்த நகரப்பேருந்து நகரக் காத்திருக்கிறது
கோடை கூரையில் தவழ்ந்து நூறுவிரல் கொடுங்கரம் நீட்டுகிறது
சன்னல்வழி
படிக்கட்டிலும் படுத்திருக்கிறது வெய்யில்
சோறாகத் துணிந்த பிடி அரிசியாய்
உலை நுழைகிறது கூட்டமொன்று
ஊதல் குலவையிட்டு நடத்துனர் நடத்திவைத்தார்
இடைகவ்விய குழந்தையுடன் உடை நனைத்த வியர்வையுடன்
தாயொருத்தி படியேறினாள்
காதருகே அலறிய குழந்தையை அவள் கவனிக்காததை
பேருந்து மொத்தமும் கவனித்தது
கைதூக்கி கம்பியை பிடிக்கையில்
வலது மார்பு தெரியாமல் மறைக்கையில்

Friday, April 16, 2010

எனது சினிமா கட்டுரை


My article in Uyirmmai. http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2744
தமிழ் சினிமாவும் திரைக்கதை விவாதமும்
ஹெச்.விஜயராகவன்


பதினைந்து இருபது வருடங்களுக்கு முன் தூர்தர்ஷனில் ஒரு விழிப்புணர்வு கார்ட்டூன் படம் ஒளிபரப்பப்படும் ‘The Baloon’ என்ற தலைப்பில். ஒரு சிறுவன் வீட்டிற்குள் ஒரு பலூனைப் பெரிதாக ஊதிக்கொண்டே போக, அது படாரென்று வெடித்து விடும். அந்த சத்தத்தை வெளியில் இருந்து கேட்கும் ஒருவன் பயந்து போய் ஓடிச் சென்று ஒரு பெண்ணிடம் தான் ஒரு துப்பாக்கி வெடித்ததைக் கேட்டதாகச் சொல்வான். அந்தப் பெண் இரண்டு துப்பாக்கிகள் வெடித்ததாகத் தன் கணவனிடம் சொல்வாள். இவ்வாறாக விஷயம் பல உருவங்கள் கொண்டு பல துப்பாக்கிகள் வெடித்துப் பலர் இறந்ததாகப் பரவி அது பெருஞ்செய்தியாகிப் பல விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

அவரவர் இரவு


விடிவதனால் எந்தப் பயனும் இல்லாத நீண்ட கோடை இரவொன்றை “டொக் டொக்” என்று தடிச்சத்தம் கொண்டு தட்டிக் கழித்துக்கொண்டிருந்தான் உப்பிலியப்பன். அவ்விடத்தின், அன்றைய இரவின் முக்கிய அங்கமாக அந்த சத்தம் ஒலித்துக்கொண்டிருந்தது. அதன் சுருதியாய் எதிரில் விரிந்திருந்த கடலின் பேரிரைச்சல். கோடை வெயில் இரவில் தரையிலிருந்து எழுந்தது. உப்புக்காற்று கடல்துளிகளோடு வந்து படிந்து, வியர்வையுடன் கலந்து அவனுடைய அடர்ந்த சீருடைச்சட்டையை இரண்டாம் தோலாக உடலில் படரச்செய்தது. பகலுக்குப்பின்னான தொடர்ச்சியான இரண்டாம் ஷிப்ட்டின் சோர்வு கண்ணிமைகளை யாரோ பிடித்து தொங்குவது போல இருந்தது. தடிதட்டும் சத்தம் குறைந்து கண்கள் சொருகும் தோறும், கண்ணில் பட்டு எரியும் வியர்வையின் உப்போ, தன்னையறியாத ஒரு எச்சரிக்கை உணர்வோ, புது இடத்தின் மீதான உள்ளார்ந்த பயமோ விழிப்புத்தட்டச் செய்துவிடும்.